காவல்துறை அமைச்சு பணியாளர்கள் 3-வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காவல்துறை அமைச்சு பணியாளர்கள் 3-வது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.;
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு காவல் துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூடுதல் அமைச்சு பணி இடங்களை வழங்கிட வேண்டும். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அமைச்சு பணியாளர்களுக்கு ஈட்டுப்படி வழங்கிட வேண்டும். போலீசார் குடியிருப்புகளில் அமைச்சு பணியாளர்களுக்கு 10 சதவீதம் குடியிருப்பு வழங்க வேண்டும். முழு உடல் மருத்துவ பரிசோதனை திட்டத்தினை அமைச்சு பணியாளர்களுக்கு விரிவுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 19-ந்தேதி முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்து வருகின்றனர். 3-வது நாளான நேற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட செயலாளர் நெப்போலியன் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.