வளையமாதேவி கிராமத்துக்கு செல்ல 2 எம்.எல்.ஏ.க்களுக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

என்.எல்.சி. சுரங்கத்துக்காக அழிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிடுவதற்காகவும், விவசாயிகளை சந்திப்பதற்காகவும் வளையமாதேவி கிராமத்துக்கு செல்ல 2 எம்.எல்.ஏ.க்களுக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.;

Update: 2023-08-01 18:45 GMT

சேத்தியாத்தோப்பு:

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காக 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக வளையமாதேவி பகுதியில் ஏற்கனவே கையகப்படுத்திய விளைநிலத்தில் புதிய பரவனாறுக்காக வாய்க்கால் வெட்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது. இதற்காக விளைநிலத்தில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களும் அழிக்கப்பட்டன.

அனுமதி மறுப்பு

இந்த பகுதிகளை பார்வையிடுவதற்காகவும், விவசாயிகளை சந்திப்பதற்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் மாலி(நாகை மாவட்டம் கீழ்வேளூர்), சின்னதுரை(புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை) ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று காலை சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள், அங்கிருந்து வளையமாதேவி கிராமத்துக்கு புறப்பட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையிலான போலீசார், 2 எம்.எல்.ஏ.க்களையும் கட்சி நிர்வாகிகளையும் தடுத்து நிறுத்தி, வளையமாதேவி கிராமத்துக்கு செல்ல அனுமதி மறுத்தனர்.

கண்டன கோஷம்

இதை கண்டித்தும், என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோஷமிட்டனர். பின்னர் 2 எம்.எல்.ஏ.க்களும் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்.எல்.சி. நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க செல்ல முயன்றோம். ஆனால் என்.எல்.சி. நிர்வாகத்தின் ஆதரவாக செயல்படும் காவல்துறையினர், எங்களை அங்கு செல்ல அனுமதி மறுத்துவிட்டார்கள். நெற்பயிர்களை என்.எல்.சி. அழித்தது வேதனை அளிக்கிறது. இதற்கு மாநில அரசு பதிலளிக்க வேண்டும். என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட என்.எல்.சி. செலவு செய்யாமல் குஜராத், பூட்டான் போன்ற இடங்களில் செலவு செய்யப்படுகிறது. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இவைகள் அனைத்தையும் கண்டித்து வருகிற 8-ந் தேதி சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு, விருத்தாசலம், கடலூர் உள்ளிட்ட பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்