தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

Update: 2023-01-24 18:45 GMT

குடியரசு தினவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

குடியரசு தினவிழா

இந்திய நாட்டின் குடியரசு தினவிழா நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது.

விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர பாதுகாப்பு போலீசார் கடற்கரை ரோந்து பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர். தீவு பகுதிகளில் சந்தேகப்படும்படியாக நடமாட்டங்கள் உள்ளதா? என்றும் கண்காணித்து வருகின்றனர்.

சோதனை

நேற்று மாலையில் தூத்துக்குடியில் ரெயில்வே போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் தலைமையில் ரெயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ரெயில் நிலையத்தில் பார்சல்கள் வைக்கும் அறை, பயணிகள் அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர். மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்வதற்காக காத்து இருந்த பயணிகளின் உடைமைகள் மற்றும் ரெயில் பெட்டிகளிலும் சோதனை நடத்தினர். தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசாரும் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்