நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

குமரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2023-08-12 18:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சுதந்திர தினவிழா

நாடு முழுவதும் சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அன்று காலையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் சுதந்திர தினவிழா நடைபெற இருக்கிறது. மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

விழாவில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை, பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற இருக்கிறது. இதையொட்டி கடந்த சில தினங்களாக நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்து வந்தது. நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

ரெயில் நிலையத்தில் சோதனை

இதேபோல் சுதந்திர தினவிழாவில் 7 பள்ளிகளைச் சேர்ந்த 550 மாணவ- மாணவிகள் பங்கேற்கும் 50 நிமிட கலைநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி அந்தந்த பள்ளிகளிலும், நேற்று முன்தினம் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியிலும் நடந்தது.

சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடலோர பகுதிகள் மற்றும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். ரெயில்நிலைய தண்டவாளத்தில் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகள் மூலம் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ரெயில் பெட்டிகளில் வெடிகுண்டுகளை கண்டறியும் கருவிகள் மூலம் சோதனை நடத்தப்படடது. பயணிகள் கொண்டு வரும் உடமைகள், பார்சல்கள் ஆகியவையும் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. இந்த சோதனை சுதந்திர தினத்தன்று வரை தொடரும் என போலீசார் தெரிவித்தனர். இதேபோல கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் பலத்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

'ஸ்டோமிங் ஆபரேஷன்'

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி கடற்கரை கிராமங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள விடுதிகளில் தங்குபவர்களின் முழுவிவரங்களை சேகரித்து வைக்க வேண்டும் என்று விடுதி உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 'ஸ்டோமிங் ஆபரேஷன்' நடத்தப்பட உள்ளது. சுதந்திர தினவிழா பாதுகாப்பு பணிக்காக 1000 போலீசார் நியமிக்கப்பட இருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திரதின விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்