வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய 50 பேர் மீது போலீசார் வழக்கு

கரூரில் 2-வது நாளாக 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update: 2023-05-27 19:04 GMT

வருமான வரித்துறை சோதனை

தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மீது வரி ஏய்ப்பு புகார்கள் வருமான வரித்துறைக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களுடைய வீடு மற்றும் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்துவதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசிய திட்டம் வகுத்து வந்துள்ளனர்.

அதன்படி கரூரில் நேற்றுமுன்தினம் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போலீசில் புகார்

வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர். இதனால் செய்வதறியாமல் அதிகாரிகள் திகைத்தனர். அங்கு நிலவிய அசாதாரண சூழ்நிலையை உணர்ந்து கொண்டு சோதனையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். பின்னர் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் கோவை மற்றும் தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நேற்று 100-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படையினர் கரூருக்கு வருகை தந்தனர். அவர்கள் கரூர் மற்றும் க.பரமத்தி பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்புடன் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை சாலையில் உள்ள கொங்கு உணவகத்திற்கு நேற்று மாலை வருமானவரித்துறையினர் சீல் வைத்தனர்.

50 ேபர் மீது வழக்கு

இந்நிலையில் நேற்றுமுன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் தாக்கப்பட்டதாக கூறி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் கொடுத்த புகாரின்பேரில், அரசு அதிகாரிகளை பணி ெசய்ய விடாமல் தடுத்தல், வாகனங்களை சேதப்படுத்துள்ள உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத 50-க்கும் ேமற்பட்டோர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்