குற்ற செயல்களை குறைக்க போலீஸ் உதவி மையம்

குற்ற செயல்களை குறைக்க போலீஸ் உதவி மையம்

Update: 2022-07-30 19:48 GMT

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் குற்ற செயல்களை குறைக்க போலீஸ் உதவி மையம் செயல்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா கூறினார்.

பழைய பஸ் நிலையம்

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் போலீஸ் உதவி மையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் பழைய பஸ் நிலையத்தை இடித்து விட்டு புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.14 கோவில் செலவில் பஸ் நிலையம் கட்டப்பட்டது.

மேலும் பஸ்நிலையத்தில் உள்ள கடைகள் பொது ஏலமிடப்பட்டு அது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கும், ஒரத்தநாடு, மருத்துவக்கல்லூரி, வல்லம், நாட்டாணி, நாஞ்சிக்கோட்டை, மாரியம்மன்கோவில், சாலியமங்கலம், பாபநாசம், திருவையாறு, கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, அம்மாப்பேட்டை, வடுவூர்உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

போலீஸ் உதவி மையம்

இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் இங்கு போலீஸ் உதவி மையம் மீண்டும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி திருவையாறு, கும்பகோணம், பாபநாசம் பஸ் வெளியே வரும் வாசல் அருகே புதிதாக போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டது.

இதனை தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா நேற்று திறந்து வைத்தார். அப்போது மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

குற்ற செயல்களை தடுக்க......

இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா கூறுகையில், "போலீஸ் உதவி மையத்தில் எப்போதும் போலீசார் பணியில் இருப்பார்கள். புதிதாக உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் போலீஸ் கண்காணிப்பு அதிகமாக இருக்கும். இதனால் குற்ற செயல்கள் குறையும். மேலும் குற்ற செயல்கள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கும் வசதியாக இருக்கும்."என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்