கோவையில் கார் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் எதிரொலியாக திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
வெடிகுண்டு நிபுணர்களும் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் எதிரொலியாக கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்கிடையே கோவை மாவட்டத்தின் அருகில் உள்ள திருப்பூர் மாவட்டத்திலும் இந்த சம்பவம் தொடர்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ேபாடப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் நேரடி மேற்பார்வையில் 2 துணை கமிஷனர்கள், 4 உதவி கமிஷனர்கள் தலைமையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தங்கும் விடுதிகளில் சோதனை
திருப்பூர் மாவட்டத்தில் 80 கோவில்கள், 65 மசூதிகள் போன்றவற்றில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் வெளி மாவட்டத்தில் இருந்து வருகிற கார்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.
திருப்பூரில் முக்கிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் (லாட்ஜ்) போன்றவற்றிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி இருக்கிறார்களா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுபோல் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கும் விடுதியில் (லாட்ஜ்) தங்கி இருந்தாலோ அல்லது பொதுமக்களுக்கு அவ்வாறு தோன்றும் நபர்கள் யாரையாவது பார்த்தாலோ போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.