போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட 11 பேரின் ரூ.2.43 கோடி சொத்துக்கள் முடக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தகவல்
நாமக்கல்லில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட 11 பேரின் ரூ.2 கோடியே 43 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கூறினார்.
நாமக்கல்லில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட 11 பேரின் ரூ.2 கோடியே 43 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கூறினார்.
28 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நாமக்கல் காவல் உட்கோட்டத்தின் சார்பில் நாமக்கல்லில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் 9 போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். எளிதில் தீர்க்கக்கூடிய பணம் கொடுக்கல், வாங்கல், நிலத்தகராறு, வாய்த்தகராறு உள்ளிட்ட சிறிய பிரச்சினைகள் தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன.
இதனை தொடர்ந்து நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாமக்கல் உட்கோட்ட போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் சிறு, சிறு பிரச்சினைகளை தீர்க்க இதுபோன்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடுக்க போலீசார் சார்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குற்ற சம்பவங்களை குறைக்க 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ரூ.2.43 கோடி சொத்துக்கள் முடக்கம்
கெட்ட நடத்தை கொண்ட 480 பேரிடமிருந்து போலீசார் மூலம் நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர்கள் கெட்ட நடத்தையில் ஈடுபட்டால் 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். நாமக்கல் நகரை பொறுத்தவரை குற்ற சம்பவங்களை கண்காணிக்க 157 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் வாகனத்தின் பதிவுகளை கண்டறியும், அதிநவீன கேமரா 4 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வாகனங்களில் தப்பி செல்லும் நபர்களை எளிதாக பிடிக்க முடியும்.
நாமக்கல்லில் போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் ஈடுபட்ட 11 பேரின் ரூ.2 கோடியே 43 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் கஞ்சா, குட்கா கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு அவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமில்லாமல் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சில்லறையில் விற்பனை செய்யும் கடைகள் சீல் வைக்கப்படும். அது போன்று 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. பெட்டிக்கடையிலும் இதுபோன்ற விற்பனை நடைபெறுவது தெரியவந்தால் சீல் வைக்கப்படும்.
ரோந்து வாகனம்
நாமக்கல் நகரில் நவீன ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் அந்த வாகனம் நகரின் அனைத்து பகுதிகளிலும் ரோந்து சென்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனை மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.