2026-ல் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்: நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க.வின் வியூகம் வெளிப்படும் - அன்புமணி ராமதாஸ்

2026-ம் ஆண்டில் பா.ம.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்றும், அதற்கேற்ற வியூகம் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெளிப்படும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.;

Update:2022-11-26 23:46 IST

டாக்டர் அன்புமணி ராமதாஸ்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, தேங்கிய தண்ணீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பார்வையிட்டார்.

அப்போது மயிலாடுதுறை மாவட்டம் ஆச்சியால்புரம், குதிரைக்குத்தி, வேட்டங்குடி, நெய்தவாசல் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் வேட்டியை மடித்து கட்டியபடி நின்று, பாதிக்கப்பட்ட பயிர்களை கையில் எடுத்து பார்த்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

நிபந்தனையின்றி இழப்பீடு

கனமழையில் விவசாய நிலங்கள், பயிர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், சீர்காழி மற்றும் கொள்ளிடம் வட்டத்திலுள்ள பகுதிகளில் பயிர்கள் அதிகளவில் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. அரசு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும். குடும்பத்துக்கு ரூ.1,000 என 2 வட்டத்துக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும் என்று விவசாயிகள் போராடுகிறார்கள். அவர்களுடைய போராட்டம் நியாயமானது. உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையையும் நிறைவேற்றவேண்டும். மழைக்காலங்களில் தூர்வாரப்படும் கால்வாய்களை அனைத்து காலத்திலும் தூர்வாரவேண்டும்.

குறுவை முடிவில், சம்பா தொடக்கத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர் காப்பீடு திட்டத்தின் மூலமாக அதிகாரிகள் ஆய்வுசெய்து எந்த நிபந்தனையுமின்றி இழப்பீடு வழங்கவேண்டும். 33 சதவீத பாதிப்புகளுக்கு மேல் ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்க இயலும் என்று கூறுகிறார்கள். அரசு அதிகாரிகள் காப்பீடு நிறுவனங்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசு தனிகவனம் செலுத்தி விவசாயிகளுக்கு நிவாரணத்தை உடனடியாக வழங்கவேண்டும்.

ஒட்டுமொத்த டெல்டா பகுதிக்கும்

ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களை சேர்த்து 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அரசு கணக்கின் கீழ் 88 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஒட்டுமொத்த டெல்டா பகுதிக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

பயிர் காப்பீடு வாயிலாக முழு நிதியும் அவர்களுக்கு கிடைக்கும் வகையில் அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும். அரசு அதிகாரிகள் விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் தோரணை உள்ளது. தி.மு.க. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெரிய விவசாயி. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குறு விவசாயிகள். அவர் கூறுவதை எடுத்துக்கொள்ளக்கூடாது. அவரின் தந்தை உள்பட பலரும் விவசாயிகள். நேரடியாக பார்த்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். இதில் நிபந்தனை சொல்லக்கூடாது.

பா.ம.க.வின் வியூகம்

2026-ம் ஆண்டில் பா.ம.க. வின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம். அதற்கேற்ற வியூகம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெளிப்படும்.

பெட்ரோ கெமிக்கல், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல போராட்டம், வெள்ளம் மற்றும் வறட்சி என எந்த சூழ்நிலையிலும் நான் விவசாய மக்களுடன் இருக்கிறேன். அவர்களை மாத மாதம் வந்து பார்த்து கஷ்டங்களை கேட்டு அதனை தீர்க்க முயற்சிக்கிறேன். கட்டாயம் அவர்களின் துயர்களை தீர்ப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்