எண்ணெய் கிணறுகளை தோண்டினால் அரியலூர் மாவட்டம் பாலைவனமாகிவிடும்; ஓ.என்.ஜி.சி. திட்டத்துக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

10 எண்ணெய் கிணறுகள் தோண்டப்பட்டால் அரியலூர் மாவட்டம் பாலைவனமாகிவிடும் என்று ஓ.என்.ஜி.சி. திட்டத்துக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-21 17:07 GMT

பா.ம.க. அனுமதிக்காது

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் 200-க்கும் மேற்பட்ட கிணறுகளை அமைத்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பந்தநல்லூர் திட்டப்பகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தின் 10 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்க ஒ.என்.ஜி.சி நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதை பா.ம.க. ஒருபோதும் அனுமதிக்காது.

பாலைவனமாக மாறிவிடும்

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 10 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைத்து இயங்க தொடங்கினால் அரியலூர் மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும். அரியலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் காவிரி படுகைக்குள் வருகின்றன. வேளாண் மண்டலத்தில் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்று விதி இருக்கும் நிலையில் அதை மீறி 10 புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முயல்வது குற்றம் ஆகும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில்...

அரியலூர் மாவட்டத்தில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய பெரும் கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளன. அந்த கடமையை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் கிணறு திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, மயிலாடுதுறை மாவட்டம் முழுவதையும் அண்மையில் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்த்ததைப் போன்று, அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் முழுவதையும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்