பா.ம.க. மாவட்ட செயலாளரின் கார் கண்ணாடி உடைப்பு-சாலை மறியல்

வாணியம்பாடி அருகே 3 பேரின் ஆவணங்களை பயன்படுத்தி வங்கியில் பெற்ற ரூ.25 லட்சம் கடனை திருப்பி கேட்க சென்ற பா.ம.க. மாவட்ட செயலாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் சாலை மறியல் நடைபெற்றது.

Update: 2023-06-27 18:21 GMT

ரூ.25 லட்சம் கடன்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சின்னபள்ளிகுப்பம், தென்னம்பட்டு, பால்னாகுப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அஜித்குமார், முனிசாமி, தாமோதரன் ஆகியோரின் ஆவணங்களை (பத்திரம்) பெற்று அதை பயன்படுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சிவா என்பவர் நடத்தி வரும் டிராக்டர் நிறுவனம் மூலம் தனியார் வங்கியில் ரூ.25 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு கடன் பெற்று, முதல் தவணை தொகை மட்டுமே செலுத்தி விட்டு, பின்னர் கடன் தொகையை செலுத்த வில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் வங்கியில் கடன் வாங்கிக் கொடுத்த டிராக்டர் நிறுவனத்தினர், கடன் பெற்ற 3 பேரை அணுகி கடன் நிலுவைத் தொகையை செலுத்துமாறு கூறிய போது நாங்கள் கடன் பெறவில்லை என்றும், எங்கள் ஆவணத்தை பயன்படுத்தி செந்தில்குமார் என்பவர் கடன் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கார் கண்ணாடி உடைப்பு

அதைத்தொடர்ந்து டிராக்டர் நிறுவனத்தை சேர்ந்த பா.ம.க. மாவட்ட செயலாளர் சிவா என்பவர், செந்தில்குமார் கடை நடத்தி வரும் நிம்மியம்பட்டு பகுதிக்கு சென்று இது குறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் சிவாவின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆலங்காயம் போலீசார் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது போலீசாரின் முன்பே இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து செந்தில்குமார் சென்றுவிட்டார்.

சாலை மறியல்

கடன் பெற ஆவணங்கள் வழங்கிய பாதிக்கப்பட்ட 3 பேர் மற்றும் சிவா அவரது ஆதரவாளர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு செந்தில்குமாரை கைது செய்யக்கோரி ஆலங்காயம்- வாணியம்பாடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செந்தில்குமாரின் காரை பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்