பா.ம.க. மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க.வின் மோட்டார் சைக்கிள் வாகன பேரணிக்கு தமிழக போலீசார் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உன்னத கொள்கையை வலியுறுத்தி, கடந்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் வாகன பேரணிகளை நடத்தும்படி பா.ம.க.வினருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். பேரணியில் அதிக அளவாக 50 வாகனங்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்; பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தேன்.
ஆனால், இல்லாத காரணங்களை கூறி, பா.ம.க.வின் அந்த பேரணிக்கு அனுமதி மறுத்திருந்த தமிழக போலீசார், இப்போது தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வுக்கு மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த அனுமதி அளித்திருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்?. தமிழக போலீஸ் துறை அனைவருக்கும் பொதுவானது. அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். ஆளுங்கட்சியின் கைப்பாவையாக நடந்து கொள்ளக் கூடாது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பா.ம.க.வின் மோட்டார் சைக்கிள் வாகன பேரணிக்கு தமிழக போலீசார் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.