பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி
பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி அமையும் என முன்னாள் மத்திய மந்திரி கூறினார்.;
சிவகாசி,
சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா தலைமை தாங்கினார். விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் முன்னிலை வகித்தார். பொதுசெயலாளர் வடிவேல் ராவணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் அய்யம்பெருமாள் பிள்ளை, தேனி, மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த அமைப்பு செயலாளர் முருகானந்தம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், நெல்லை, திருச்சி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சிவகாசி அரசு கல்லூரியில் 620 மாணவ-மாணவிகள் மட்டும் படிக்க வசதி உள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையில் மாணவ-மாணவிகளை சேர்க்க தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலின் போது யாருடன் கூட்டணி என்று கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்பு மணி ராமதாஸ் ஆகியோர் அறிவிப்பார்கள். கவர்னர் ரவி அரசியல் செய்யக்கூடாது. 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலின் பா.ம.க. தலைமையில் பெரிய கூட்டணி அமைக்கப்படும். சிவகாசி மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் செய்ய தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.