கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி: சென்னையில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டின் பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.;
சென்னை,
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்குட்பட்டோர்) முதல்முறையாக தென்இந்தியாவில் தமிழகத்தில் நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் இன்று முதல் 31-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், வில்வித்தை, பேட்மிண்டன், நீச்சல், கூடைப்பந்து, குத்துச்சண்டை, ஸ்குவாஷ், யோகாசனம் உள்பட 26 பந்தயங்கள் இடம் பெறுகின்றன. இது தவிர தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காட்சி போட்டியாக சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான அதாவது 20 விளையாட்டுகள் சென்னையிலேயே நடத்தப்படுகிறது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டின் பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி ஸ்டேடியம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. தொடக்க விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்களின் கண்கவர் நடனம், தமிழக பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. யோகா, சிலம்பம், மல்லர்கம்பம், களரியில் வீரர், வீராங்கனைகளின் சாகசமும், இசைக்கச்சேரி, பரதநாட்டியமும் விருந்தினர்களை பரவசப்படுத்த காத்திருக்கிறது.
விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக வருகை தருகிறார். கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்கள். மத்திய விளையாட்டுத்துறை மந்திரிகள் அனுராக் தாக்குர், நிசித் பிரமானிக், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
9 முறை தேசிய சாம்பியனும், ஒலிம்பிக்கில் பங்கேற்றவருமான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை சுபா ஆகியோர் போட்டிக்கான தீபத்தை ஏந்தி வந்து பிரதமர் மற்றும் முதல்-அமைச்சரிடம் வழங்குகிறார்கள். அதைத் தொடர்ந்து போட்டியை பிரதமர் முறைப்படி தொடங்கி வைப்பார்.
இந்த விளையாட்டு திருவிழாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். முந்தைய 5 கேலோ இந்தியா இளைஞர் போட்டிகளில் 3 முறை மராட்டியமும், 2 முறை அரியானாவும் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றி இருக்கின்றன. இந்த சீசனிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் மராட்டியம் 415 பேர் கொண்ட படையை களம்இறக்குகிறது.
தமிழக அணியில் மொத்தம் 522 பேர் இடம் பிடித்துள்ளனர். 100 பதக்கங்களை நெருங்க வேண்டும். பதக்கப்பட்டியலில் டாப்-3 இடங்களை பிடிக்க வேண்டும் என்பதே தங்களது இலக்கு என்று தமிழக அணியின் தலைவர் மெர்சி ரெஜினா தெரிவித்தார்.
இந்த போட்டியை விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் நேரில் பார்வையிட வசதியாக அனுமதி சீட்டுகளை வழங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. போட்டியை நேரில் காண விரும்புவோர் TNSPORTS (ஆடுகளம்) என்ற செயலியின் மூலமாகவும், www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் போட்டி நடைபெறும் மாவட்டம், விளையாட்டு மற்றும் தேதியை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும். பின்னர் தங்களது அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். நேரில் போட்டியை காண்பதற்கு செல்லும் போது பதிவிறக்கம் செய்த அனுமதி சீட்டை செல்போனிலோ அல்லது அச்சிடப்பட்ட தாளிலோ கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.