பி.எம்.கிசான் திட்டத்தில் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும் விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுறுத்தல்

பி.எம்.கிசான் திட்டத்தில் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2022-08-24 16:07 GMT


பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கவும், இதர வேளாண் பணிகளுக்காகவும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 1,82,811 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.2 ஆயிரம் வீதம் 11 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது விவசாயிகள் ஆகஸ்டு முதல் நவம்பர் வரையுள்ள காலத்திற்கான 12-வது தவணைத் தொகையை பெறுவதற்கு தங்களது நில ஆவணங்கள், ஆதார் மற்றும் வங்கிக்கணக்கு விவரங்களை பதிவு செய்தல் கட்டாயமாகும்.

12-வது தவணை

மத்திய அரசு தற்போது பி.எம்.கிசான் திட்ட நிதி விடுவிப்பில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. வங்கிக் கணக்குக்கு நேரடியாக நிதி விடுவிப்பு செய்து வந்த நிலையில், இனி திட்ட நிதியானது ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும். மேலும் நில ஆவணங்களையும் இணைப்பது அவசியமாகும். தற்போது விவசாயிகள் 12-வது தவணைத் தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை, வங்கி எண்ணோடு இணைப்பது மற்றும் நில ஆவணங்களை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியமாகும்.

இதுநாள் வரை கடலூர் மாவட்டத்தில் 94 ஆயிரத்து 887 பயனாளிகள் மட்டுமே நில விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். மீதமுள்ள 93 ஆயிரத்து 291 பயனாளிகள் நில ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே நிதி தொகையை பெற முடியும். இதேபோல் ஆதார் எண்ணுடன், வங்கிக் கணக்கை இதுவரை 98 ஆயிரத்து 34 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 90 ஆயிரத்து 289 விவசாயிகள் வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை.

31-ந் தேதி கடைசி நாள்

வங்கிக் கணக்கு இணைப்பு செய்தால் மட்டுமே தொடர்ந்து இத்திட்டத்தில் பயன்பெற முடியும். கடலூர் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி அனைத்து வருவாய் கிராமங்களிலும், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் கூட்டாக இணைந்து வருகிற 31-ந் தேதி வரை அனைத்து வருவாய் கிராமங்களிலும், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் முகாமிட்டு பதிவு செய்கின்றனர்.

இந்த முகாம்களில் கலந்து கொண்டு விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை உள்ளீடு செய்யலாம். மேலும், இத்திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான நிதி விடுவிப்பு நடைபெறுவதால் தகுதியான விவசாயிகள் அனைவரும் தங்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இ-சேவை மையங்களில் இணைக்க வேண்டும்.

இ-சேவை மையங்கள்

ஆகவே பிரதம மந்திரியின் விவசாயிகள் கவுரவ நிதி திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற விவசாயிகள் உடனடியாக இப்பணிகளை செய்திட ஏதுவாக அனைத்து வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் "விவசாயிகள் உதவி மையங்கள்" செயல்படுகிறது. இந்த சேவையை விவசாயிகள் பயன்படுத்திட வேண்டும். ஆதார் எண், வங்கி கணக்கு மற்றும் நில ஆவணங்கள் இணைப்பு செய்திடாத விவசாயிகள், தொடர்ந்து பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டத்தில் பயன்பெற இயலாது. எனவே பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை மற்றும் இ-சேவை மையங்களை தொடர்பு கொண்டு வருகிற 31-ந் தேதிக்குள் நில ஆவணங்கள், வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண்களை இணைப்பு செய்து தொடர்ந்து ஊக்கத்தொகை பெற்று பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்