பிளஸ்-2 தமிழ் தேர்வு எளிதாக இருந்தது

பிளஸ்-2 தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.;

Update: 2023-03-13 19:00 GMT

எளிதாக இருந்தது

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் தமிழ் பாடத்துக்கான தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய அனுபவம் குறித்து மாணவ, மாணவிகள் கூறியதாவது:-

கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பவனிதா:- தேர்வுக்கு நல்ல முறையில் தயாராகி இருந்தாலும், அரசு பொதுத்தேர்வு என்பதால் ஒருவித பதற்றம் இருந்தது. தேர்வு அறைக்கு சென்றவுடன் வினாத்தாள் கொடுத்து அவற்றை வாசிக்க போதிய அளவில் நேரம் கொடுக்கப்பட்டது. அந்த நேரம் பதற்றத்தை தணிக்கவும், வினாக்களை புரிந்து கொள்ளவும் உதவியாக இருந்தது. தேர்வை நன்றாக எழுதி இருக்கிறேன். கேள்விகள் அனைத்தும் எளிமையாக இருந்தது.

கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அப்ரீன் பாத்திமா:- தமிழ் பாடத் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. 1 மதிப்பெண் கேள்விகள், 2 மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் கேள்விகள் எளிமையாக இருந்ததால், பதற்றமின்றி தேர்வு எழுத முடிந்தது. அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சக தோழிகளும் நன்றாக தேர்வு எழுதி இருப்பதாக கூறினர். தேர்வுக்கு கொடுத்த நேரத்துக்கு முன்பாகவே வினாக்களை எழுதி முடித்துவிட்டு நன்றாக சரிபார்த்துக் கொள்ளவும் நேரம் இருந்தது. இது மகிழ்ச்சியை கொடுத்தது.

1 மதிப்பெண் கேள்விகள்

கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆனந்த்:- நான் கண்டமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகிறேன். தேர்வு எளிதாக இருந்தது. 1 மதிப்பெண் வினாக்கள் மட்டும் பாடங்களுக்கு உள்ளே இருந்து சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் கேட்கப்பட்டு இருந்தன. ஒரு தடவைக்கு மேல் கேள்வியை வாசித்து பார்த்ததால், விடை எழுதுவதற்கு எளிதாக இருந்தது. மாணவர் விடுதியில் வழிகாட்டி கையேடு கொடுக்கப்பட்டு இருந்தது. அது தேர்வுக்கு பயனுள்ளதாக இருந்தது.

கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பால்பாண்டி:- தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்ததோடு, கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் எழுதி முடிக்க முடிந்தது. இதேபோன்று இனி வரும் தேர்வுகளும் எளிதாக இருந்தால் அதிக மதிப்பெண் எடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்