விழுப்புரம் அருகே விஷம் குடித்து பள்ளிக்கு வந்த பிளஸ்-2 மாணவி சாவு காரணம் என்ன? போலீசார் விசாரணை
விழுப்புரம் அருகே விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த பிளஸ்-2 மாணவி மயங்கி விழுந்து இறந்தார். அவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பிளஸ்-2 மாணவி
விழுப்புரம் அருகே உள்ள மல்லிகைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகள் அஸ்வினி (வயது 17). இவர் மாம்பழப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.இவர் இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார். 10.30 மணியளவில் வகுப்பறையில் இருந்த மாணவி அஸ்வினி, வாயில் நுரைதள்ளியவாறு திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதை பார்த்ததும் சக மாணவ- மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.
விஷம் குடித்து தற்கொலை
உடனே பள்ளி ஆசிரியர்கள் விரைந்து சென்று மாணவி அஸ்வினியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அப்போது, தான் வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்படும்போதே விஷம் குடித்து விட்டு வந்ததாக அந்த மாணவி கூறினார். பின்னர் மாணவி அஸ்வினியை மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் காணை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார், மாம்பழப்பட்டு பள்ளிக்கு நேரில் சென்று அங்கிருந்த மாணவியின் சக தோழிகள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரிடம் நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினர்.
காரணம் என்ன?
மேலும் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷம் குடித்த நிலையில் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த பிளஸ்-2 மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.