பிளஸ் - 2 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!
பிளஸ் - 2 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
பிளஸ் 2 தேர்வெழுதியவர்களில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விருப்பமுள்ளோர், இன்று முதல் விண்ணப்பிக்கத் தொடங்கலாம்.
பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள், உரிய நகல்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து, சரிபார்க்கலாம்.
அதன் அடிப்படையில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்ய விரும்புவோர் அதே தளத்தில், அதற்கான விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அந்த விண்ணப்பத்தை 2 நகல்கள் பூர்த்தி செய்து இன்று தொடங்கி ஜூன் 3 மாலை 5 மணிக்குள் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறுகூட்டலுக்கான கட்டணமாக உயிரியல் பாடத்துக்கு ரூ.305; இதர பாடங்களுக்கு ரூ.205 கட்ட வேண்டும். மறுமதிப்பீடுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் இந்த கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.