பிரபல பாடகி வாணி ஜெயராம் மரணம்; போலீசார் தீவிர விசாரணை

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று மரணம் அடைந்தார். சென்னையில் உள்ள வீட்டில் ரத்தக்காயங்களுடன் அவர் பிணமாக கிடந்தது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.;

Update: 2023-02-05 00:23 GMT

தமிழ் திரையுலகில் பின்னணி பாடகிகள் பலர் இருந்தாலும் குறிப்பிட்ட சிலரின் பாடல்கள் மட்டுமே காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.

வாணி ஜெயராம்

அந்த வரிசையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபல பாடகி வாணி ஜெயராம் (வயது 78) தனி இடத்தை பிடித்தவர். இவரது கணவர் ஜெயராம் 2018-ல் மரணம் அடைந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவரை மலர்கொடி என்ற வீட்டு வேலைக்கார பெண் கவனித்து வந்தார்.

கதவை திறக்கவில்லை

இந்த நிலையில் மலர்கொடி வழக்கம் போல் நேற்று காலை வாணி ஜெயராம் வீட்டுக்கு வேலைக்கு சென்றார். வீட்டின் 'காலிங் பெல்'லை பல முறை அழுத்தியும், கதவை பல முறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

செல்போனில் அழைத்தும் வாணி ஜெயராமிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை. இதனால் பதற்றம் அடைந்த மலர்கொடி அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வசிக்கும் மாலதி என்பவரிடம் இதுகுறித்து தெரிவித்தார். அவரும் தனது பங்கிற்கு 'காலிங் பெல்'லை அழுத்தி பார்த்துள்ளார்.

பிணமாக கிடந்தார்

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஆழ்வார்ப்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் வசிக்கும் வாணி ஜெயராமின் தங்கை உமாவுக்கு (74) செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

அவர் உடனடியாக மாற்று சாவியை எடுத்துக்கொண்டு வாணி ஜெயராம் வசித்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தார். பின்னர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது படுக்கை அறையின் கதவும் பூட்டப்பட்டு இருந்தது. அந்த கதவை திறந்து பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

படுக்கை அறையில் இருந்த கண்ணாடி 'டீப்பாயின்' மேல் ரத்த வெள்ளத்தில் வாணி ஜெயராம் தலை சரிந்தபடி பிணமாக கிடந்தார். அவரது நெற்றி பொட்டில் பலத்த காயம் இருந்தது.

தடயவியல் அதிகாரிகள் ஆய்வு

இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ரபி அபிராம், இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு உடனே விரைந்து சென்றனர்.

வாணி ஜெயராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தடய அறிவியல் துறை அதிகாரிகளும் வாணி ஜெயராம் வீட்டுக்கு வந்து ஆய்வு நடத்தினர். கை ரேகைகளையும் பதிவு செய்தனர்.

வாணி ஜெயராம் மர்ம மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகன் ஸ்ரீராம் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் கமிஷனர் விளக்கம்

வாணி ஜெயராம் மரணம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

வாணி ஜெயராமுக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது. மேலும் அவருக்கு ரத்த அழுத்த பாதிப்பும் இருந்துள்ளது. அவர் பூட்டிய அறைக்குள் தலையில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார்.

எனவே இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனையை இன்றே (நேற்று) முடித்து உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் அதில் இருக்கும் தகவல் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தவறி விழுந்து இறந்தாரா?

வாணி ஜெயராம் வயது முதிர்வு காரணமாக படுக்கை அறையில் நடந்து செல்லும்போது கால் தவறி கண்ணாடி டீப்பாயில் விழுந்து இருக்கலாம். இதில் அவரது தலை நெற்றி பொட்டில் காயம் ஏற்பட்டு அதிகளவில் ரத்தம் வெளியேறி நேற்று முன்தினம் இரவே உயிரிழந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

எனினும் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக கிடைத்த பிறகே முழுவிவரம் தெரியவரும்.

பிரபலங்கள் அஞ்சலி

இதற்கிடையே ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் உடனே உடலை பிரேத பரிசோதனை செய்தனா. இதனையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வாணி ஜெயராமின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று வாணி ஜெயராமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இறுதி சடங்கு நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

வாழ்க்கை குறிப்பு

வேலூரில் உள்ள இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம், முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றவர். 1971-ம் ஆண்டு குட்டி என்ற இந்தி படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.

தமிழில் 1974-ம் ஆண்டில் வெளிவந்த 'தீர்க்க சுமங்கலி' என்ற படத்தில் கவிஞர் வாலி எழுதிய 'மல்லிகை என் மன்னன் மயங்கும்...' என்ற பாடலை பாடி பிரபலம் ஆனார். இந்த பாடல் அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது.

'ஏழு ஸ்வரங்களுக்குள்', 'கேள்வியின் நாயகனே', '௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம்', 'யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது', 'கவிதை கேளுங்கள் கருவில்', 'நித்தம் நித்தம் நெல்லு சோறு.', 'என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்', 'மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்', நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன், 'நானே நானா யாரோதானா', 'மேகமே மேகமே பால் நிலா தேயுதே' உள்பட ஏராளமான இனிமையான பாடல்களை அவர் பாடியுள்ளார்.

பத்மபூஷண் விருது

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காலி உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கிறார். பக்தி பாடல்களும் பாடி உள்ளார்.

சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றுள்ளார். தமிழில் அபூர்வராகங்கள் படத்தில் இடம்பெற்ற ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் என்ற பாடலுக்காக இந்த விருது கிடைத்தது. மற்ற 2 தேசிய விருதுகள் தெலுங்கு பாடலுக்கு கிடைத்தன.

இவரது கலை சேவையை பாராட்டி மத்திய அரசு கடந்த மாதம் (ஜனவரி) 25-ந் தேதி 'பத்மபூஷண்' விருது அறிவித்தது. ஆனால் அந்த விருதை வாங்குவதற்குள் அவர் மரணம் அடைந்து விட்டார்.

இதுதவிர பல்வேறு மாநில அரசின் விருதுகளையும், 'கமுகரா', 'தென்னிந்திய மீரா' போன்ற உயரிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

கலைவாணி

சினிமா பாடல்கள் தவிர பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். வாணி ஜெயராம் பாடகியாக 50 ஆண்டுகளை நிறைவு செய்த விழா, சமீபத்தில்தான் கொண்டாடப்பட்டது.

இளையராஜா, கே.வி.மகாதேவன், ஓ.பி.நாயர், மதன்மோகன் ஆகிய ஜாம்பவான்கள் இசையில் அவர் பாடல்கள் பாடி அசத்தியிருக்கிறார்.

வாணி ஜெயராமின் இயற்பெயர் கலைவாணி ஆகும். திருமணத்துக்கு பிறகு தனது பெயரை வாணி ஜெயராம் என மாற்றிக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்