குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சிக்காக மலர் நாற்றுகள் நடவு பணி தொடக்கம்

குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 63-வது பழக்கண்காட்சி வருகின்ற மே மாதம் நடைபெறுகிறது. இதற்காக மலர் நாற்றுகளை நடவு பணி செய்யும் பணி நேற்று தொடங்கியது.;

Update: 2023-01-19 18:45 GMT

குன்னூர்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 63-வது பழக்கண்காட்சி வருகின்ற மே மாதம் நடைபெறுகிறது. இதற்காக மலர் நாற்றுகளை நடவு பணி செய்யும் பணி நேற்று தொடங்கியது.

பழக்கண்காட்சி

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக, தோட்டக்கலைத் துறை சார்பில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதன்படி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியும் நடைபெறும்.

இதையொட்டி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று கண்காட்சிக்காக மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது. இதை தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் பொறுப்பு சிப்லாமேரி தொடங்கி வைத்தார்.

2¾ லட்சம்

இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறியதாவது:-கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக, பூங்காவில் பல்வேறு மலர் செடிகள் வளர்க்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சிப்படுத்தப்படும். இந்த ஆண்டு 2 லட்சத்து 84 ஆயிரம் மலர் நாற்றுகளை பூங்காவில் நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பேன்சி பிளாக்ஸ், டேலியா, சால்வியா, பிளாக்ஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம், ஜெராேனியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், ஸ்வீட்வில்லியம், பிரிமுளா, ஆஸ்டர் உள்ளிட்ட 150 வகையான மலர் விதைகள் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சிம்ஸ் பூங்காவில் நாற்றுகளாக உருவாக்கப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்த பின்னர் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இயற்கை முறையில் விளைவித்த பழங்களை கொண்டு புதிதாக அலங்காரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இதில் தோட்டகலை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன், சிம்ஸ் பூங்கா மேலாளர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்