70 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி; கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

Update: 2023-03-04 18:45 GMT

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

மரக்கன்றுகள் நடும் பணி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் மற்றும் மாநகராட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்று ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 60 வார்டு பகுதிகளிலும் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள உரக்கிடங்கு பகுதியில் நேற்று பசுமையான தூத்துக்குடியை உருவாக்கும் விதமாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். உரங்கிடங்காக பயன்படுத்தப்படும் இந்த இடத்தில் ஏற்கெனவே 35 ஏக்கர் பரப்பில் சுமார் 28 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த இடத்தை எழில்மிகு பசுமை போர்வை நிலமாக உருவாக்கும் வகையில் இங்கு முதல் கட்டமாக 12.50 ஏக்கரில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதில் மா, பலா, கொய்யா, புளி, நவா, வேம்பு, புங்கன், பூவரசு, கொடுக்காபுளி, வாகை, இடும்பை, நீர்மருது, மகாகனி, தூங்கு வாகை, நெல்லி, வாடாச்சி, சரக்கொன்றை, தான்ட்ரிக்காய் உள்ளிட்ட 18 வகையான மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மரக்கன்றுகள் அனைத்தும் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரின் மூலம் பராமரிக்கப்படுகிறது.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாநகராட்சி துணை ஆணையர் குமார், மாநகராட்சி உதவி பொறியாளர் பிரின்ஸ், அதிகாரிகள் சேகர், காந்திமதி, தனசிங், ராமசந்திரன். ரெங்கநாதன், ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்