12¾ லட்சம் மரக்கன்றுகள் நடவு
கரூர் மாவட்டத்தில் 12¾ லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த 4-ந் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்-அமைச்சரின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 12,72,500 மரக்கன்றுகள் நடவு செய்யும் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட இனுங்கூர், அய்யர்மலை பகுதிகளில் மரக்கன்றுகள் பராமரிக்கப்படுவதை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். சத்தியமங்கலம் கிராமத்தில் அனாதீனம் நிலத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சம் மரக்கன்றுகளும், பண்ணப்பட்டி கிராமத்தில் கல்லாங்குத்து நிலத்தில் 9.11 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சம் மரக்கன்றுகளும், இனுங்கூர் கிராமத்தில் வேளாண்மை துறை பாதுகாப்பில் உள்ள நிலத்தில் 74 ஏக்கர் பரப்பளவில் 3 லட்சம் மரக்கன்றுகளும், கனிமவளத்துறை சார்பில் 2 லட்சம் மரக்கன்றுகளும், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் 25 ஆயிரம் மரக்கன்றுகளும், புகலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1,300 மரக்கன்றுகளும், பள்ளப்பட்டி நகராட்சி உட்பட்ட பகுதிகளில் 1,800 மரக்கன்றுகளும், குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,300 மரக்கன்றுகளும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு இடங்களில் 50,650 மரக்கன்றுகளும், பேரூராட்சிகள் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் 20 ஆயிரம் மரக்கன்றுகளும், நெடுஞ்சாலை துறை சார்பில் பல்வேறு சாலை பகுதிகளில் 6,700 மரக்கன்றுகளும், சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் 500 மரக்கன்றுகளும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் ஒரு கிராம பஞ்சாயத்திற்கு குறைந்தது 10,000 மரக்கன்றுகள் வீதம் 157 பஞ்சாயத்துகளுக்கு 4 லட்சம் மரக்கன்றுகளும் ஆக மொத்தம் கரூர் மாவட்டம் முழுவதும் வன பகுதியினை மேம்படுத்துவதற்காகவும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காகவும் 12 லட்சத்து 72 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் முடிவுற்றது. அவ்வாறு நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கப்படுவது, நீர்பாசன வசதி செய்யப்பட்டது மற்றும் மரக்கன்றுகள் பாதுகாப்பு பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு, மரக்கன்றுகளை பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.