நீலகிரியில் 1½ லட்சம் மரக்கன்றுகள் நடவு
பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் நீலகிரியில் 1½ லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
ஊட்டி,
பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் நீலகிரியில் 1½ லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
புகைப்பட கண்காட்சி
நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், 'ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து புகைப்பட கண்காட்சி மற்றும் அனைத்து துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட பணி விளக்க கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று தொடங்கியது.
இதனை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தொடக்க விழாவில் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையில் நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் நீலகிரியில் கூடலூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது.
நலத்திட்ட உதவிகள்
பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் நீலகிரியில் கடந்த ஒரு ஆண்டில், 1½ லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் காட்டு யானைகளை பாதுகாக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சி முகமை, வேளாண் வளர்ச்சித்துறை போன்ற துறைகளின் மூலமாகவும், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அனைவரும் அரசு திட்டங்களை தெரிந்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக 69 பயனாளிகளுக்கு ரூ.96 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கலைநிகழ்ச்சிகள்
புகைப்பட கண்காட்சி வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வன அலுவலர் கவுதம், திட்ட இயக்குனர்கள் ஜெயராமன் (ஊரக வளர்ச்சி முகமை), பாலகணேஷ் (மகளிர் திட்டம்), தோட்டகலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஆர்.டி.ஓ. துரைசாமி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சையத் முகம்மத், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சரண் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.