பால் கொள்முதலை 70 லட்சம் லிட்டராக அதிகரிக்க திட்டம்

தமிழகத்தில் பால் கொள்முதலை 70 லட்சம் லிட்டராக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.;

Update: 2023-05-20 21:41 GMT

நாகர்கோவில்:

தமிழகத்தில் பால் கொள்முதலை 70 லட்சம் லிட்டராக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

பால் கொள்முதல்

பாள்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும். முதற்கட்டமாக பால்வளத்துறை நிர்வாகத்தை சீரமைத்து பால் வளத்திற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தற்போது 45 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதை 70 லட்சம் லிட்டராக அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம். தமிழ்நாட்டில் பால் பண்ணைகளில் பழைய எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த எந்திரங்களை நவீனப்படுத்துவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

பால் வளத்தை பெருக்குவதற்கு கால்நடைகளுக்கான தீவனப் பகுதி உருவாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற துறைகளோடு இணைந்து அதற்கான முறையான திட்டம் வகுக்கப்படும். 2 லட்சம் கறவை மாடுகள் வழங்குவதாக அறிவித்திருக்கிறோம்.

ஏழை மக்களை பாதிக்கும்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தபோது பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வரி விதிப்பானது பூவில் இருந்து தேனீ தேனை எடுப்பது போல இருக்க வேண்டும். மாறாக கரும்பை எந்திரத்தில் போட்டு சாறு பிழிவது போல இருக்கக் கூடாது என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி இருக்கிறார். அதுபோல பொதுமக்களை பாதிக்காத வகையில் அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு பொதுமக்களை பாதிக்கும். மத்திய அரசு இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அரசு எப்போது ஒரு நிலைப்பாடு எடுத்தாலும் அதை மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்