விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடங்களில் பொறுப்பாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும் வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவுரை

விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடங்களில் பொறுப்பாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் தெரிவித்தார்.

Update: 2022-08-21 16:45 GMT

வால்பாறை

விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடங்களில் பொறுப்பாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி தின விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வால்பாறை போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூடடம் நடந்தது. கூட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் தலைமை தாங்கி, இந்து முன்னணி மற்றும் பா.ஜனதா நிர்வாகிகளுடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடங்களில் அந்தந்த பகுதியின் பொறுப்பாளர்கள் 5 பேர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும். போலீசாருடன் தொடர்பில் இருக்க வேண்டும். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 9 அடி உயரமுள்ள சிலையையும் பிற இடங்களில் அதற்கு குறைவான அளவில் உள்ள களிமண் சிலைகளை பயன்படுத்த வேண்டும். பிரதிஷ்டை செய்யும் இடங்களில் இரவு 7 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பட்டாசு வெடிக்கக்கூடாது

அனுமதி கேட்டுள்ள இடங்களை தவிர புதிய இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது. தகர கூரைகளை சிலைகள் வைக்கும் இடங்களில் பயன்படுத்தவேண்டும். மணல், தண்ணீர் பிரதிஷ்டை செய்துள்ள இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

வருகிற செப்டம்பர் மாதம் 4-ந்தேதி பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளை நடுமலை ஆற்றில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து செல்லும் போது குடிபோதையில் இருப்பவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஒத்துழைப்பு

எஸ்டேட் பகுதியில் விநாயகர் சிலைகள் வைத்துள்ள இடங்களின் விபரங்களை வனத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். மின்வாரியம், அரசு ஆஸ்பத்திரி, 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்களின் செல் போன் எண்களை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். உரிய நேரத்திற்கு சிலைகளை எடுத்து வந்து கரைப்பதற்கு போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். பக்தியுடனும் விநாயகர் சிலைகளுக்கு உரிய மரியாதை கொடுத்து விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக அனைத்து தரப்பு மக்களும் வழிபடும் வகையில் கொண்டாடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம், சப் -இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்