பிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லை டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update:2023-05-22 01:18 IST

நெல்லை டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா கொடியேற்றம்

நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆனி தேர் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இதன் முன்னோடியாக பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, நெல்லையப்பர் கோவிலின் உப கோவிலும், ஊர் காவல் தெய்வமுமான டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் வைகாசி திருவிழா நடைபெறும்.

இந்த திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் நடைதிறக்கப்பட்டது. அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதையொட்டி கொடி பட்டம் ரத வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் வழிபட்டனர்.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 29-ந் தேதி பிட்டாபுரத்தி அம்மன், நெல்லையப்பர் கோவிலுக்கு தேரில் எழுந்தருளும் வைபவம், 30-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

நெல்லையப்பர் கோவில்

அதை தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் பிள்ளையார் கொடியேற்றம் நடக்கிறது. 24-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு ஆனி தேர் திருவிழா கொடியேற்றமும் நடைபெறுகிறது. ஜூலை மாதம் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்