பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டு உள்ளார்.;
கோவை
பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டு உள்ளார்.
3-வது குடிநீர் திட்டம்
கோவை மாநகர பகுதிக்கு சிறுவாணி அணை, பில்லூர் அணையில் இருந்து 1 மற்றும் 2-வது கூட்டுக்குடிநீர், கவுண்டம்பாளையம்-வடவள்ளி கூட்டுக்குடிநீர், ஆழியாறு அணையில் இருந்து குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் 250-க்கும் மேற்பட்ட எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் வழங்க வசதியாக 178 எம்.எல்.டி. குடிநீர் எடுக்க வசதியாக பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மேட்டுப்பாளையம் அருகே உள்ள தண்டிபெருமாள்புரம் பகுதியில் ரூ.104 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் வடிவமைப்பு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
இந்த நிலையில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், நகராட்சி நிர்வாக செயலாளருமான சிவ்தாஸ் மீனா நேற்று கோவை வந்தார். பின்னர் தண்டிபெருமாள்புரத்துக்கு சென்ற அவர், அங்கு நடந்து வரும் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும் கோடைகாலத்தில் கோவை மாநகர பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பாகவே இந்த திட்ட பணிகளை அடுத்த ஆண்டு(2023) மார்ச் மாதத்துக்குள் முடித்து அனைத்து மக்களுக்கும் சீரான வகையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். அதற்கு ஏற்றவாறு இந்த பணிகள் அனைத்தையும் தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
செம்மொழி பூங்கா
ஆய்வு முடிந்ததும் கோவை வந்த பிறகு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கோவை மத்திய சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைய உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து உக்கடம் பெரியகுளம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், குறிச்சி-குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
அப்போது குளத்தை சுற்றிலும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயனுள்ள மரக்கன்றுகளை நடவும், சுற்றுலா பயணிகளின் தேவைக்கு ஏற்ப கழிவறைகளை அமைக்கவும் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை ஆணையாளர் ஷர்மிளா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் சீனிவாசன், மாநகர பொறியாளர் எஸ்.அரசு மற்றும் மாநகராட்சி என்ஜினீயர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.