பழனி பஸ்நிலையத்தில் பரிதவிக்கும் பக்தர்கள்

போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பழனி பஸ் நிலையத்தில் பக்தர்கள் பரிதவித்து வருகின்றனர்.;

Update: 2023-09-24 19:30 GMT

பழனி பஸ்நிலையம்

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதில் பெரும்பாலான பக்்தர்கள், பஸ்கள் மூலமாக பழனிக்கு வந்து, அங்கிருந்து மலைக்கோவில் செல்கின்றனர்.

இதேபோல் பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களது அன்றாட தேவைக்காக பஸ்களில் பழனிக்கு வருகின்றனர். இதனால் பழனி பஸ்நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

குறிப்பாக வாரவிடுமுறை, விசேஷ நாட்களில் பஸ்நிலையமே ஸ்தம்பிக்கும் வகையில் கூட்டம் அலைமோதும். முக்கியத்தும் வாய்ந்த இந்த பஸ்நிலையத்தில் பயணிகளுக்கான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்து கொடுக்கப்படவில்லை என்ற புகார் நீண்டகாலமாக இருந்து வருகிறது.

பக்தர்கள் பரிதவிப்பு

பயணிகளின் வருகை அதிகரிப்பால், கடந்த 2010-ம் ஆண்டு பழனி பஸ்நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதையடுத்து புதிய நடைமேடைகள், பூங்கா என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன. இதனால் பஸ்நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றும் அளிக்கப்பட்டது.

ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் போதிய பராமரிப்பும், பயணிகளுக்கான அடிப்படை வசதிகளும் முறையாக செய்யப்படவில்லை. இதனால் தரச்சான்றை பழனி பஸ்நிலையம் இழந்தது. தற்போது வரை இதே நிலை நீடிப்பதால் பழனி பஸ்நிலையத்துக்கு வரும் பக்தர்கள், பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

பஸ்நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு இருக்கை வசதி இல்லை. ஏற்கனவே வைக்கப்பட்ட இருக்கைகளும் உடைந்து கிடக்கின்றன. இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் தரையில் அமரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில பயணிகள் கால்கடுக்க காத்திருந்து பஸ்சில் ஏறி செல்கின்றனர்.

குறைபாடுகளின் கூடாரம்

இதேபோல் தாகம் தணிக்க வைக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தில், தண்ணீர் வராததால் அது காட்சி பொருளாக மாறி விட்டது. பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், நடைமேடைகளில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதால் வாகன நிறுத்தம் போன்று காட்சி அளிக்கிறது.

மேலும் பஸ்நிலையத்தில், சில ஓட்டல்களில் திறந்தவெளியில் பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க மற்றொருபுறத்தில் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு தலைவிரித்தாடுகிறது.

இதுபோன்று பல்வேறு குறைபாடுகளின் கூடாராமாக பழனி பஸ்நிலையம் திகழ்கிறது. எனவே பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பழனி பஸ்நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கான முயற்சியில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழிமேல் விழி வைத்து பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்