மாட்டு பொங்கலையொட்டி-காளைகளுக்கு அணிவிக்கப்படும் துண்டு விற்பனை விறுவிறுப்பு
மாட்டு பொங்கலையொட்டி காளைகளுக்கு அணிவிக்கப்படும் துண்டு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.;
சிங்கம்புணரி
மாட்டு பொங்கலையொட்டி காளைகளுக்கு அணிவிக்கப்படும் துண்டு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
துண்டு விற்பனை
சிங்கம்புணரி பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குறிப்பாக மாட்டு பொங்கலுக்கு காளைகளின் கழுத்தில் துண்டு கட்டப்படுவது வழக்கம். இதற்காக ஈரோட்டில் இருந்து துண்டு கொண்டுவரப்பட்டு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து ஈரோடு துண்டு வியாபாரி சின்னச்சாமி கூறியதாவது:-
நாங்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு சில நாட்கள் முன்பே சிங்கம்புணரி பகுதியில் தங்கியிருந்து காளைகளுக்கு அணிவிக்கப்படும் துண்டுகளை விற்பனை செய்து வருகிறோம். கரூர், ஈரோடு பகுதியில் பிரசித்தி பெற்ற பட்டாணி, கஸ்தூரி, பென்ஸ், திருச்சி மல்லிகை துண்டு என பலவகையான துண்டுகளை விற்பனை செய்து வருகிறோம்.
நேர்த்திக்கடன்
குறிப்பாக சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் காளைகளுக்கு இப்பகுதி மக்கள் கரூர் வகை துண்டுகளை நேர்த்திகடனாக செலுத்துவது வழக்கம். அதன் அடிப்படையில் சிங்கம்புணரி நான்கு ரோடு, பெரிய கடை வீதி சாலை மற்றும் காரைக்குடி பகுதி சாலையோரங்களில் கடைகள் அமைத்து விற்பனை செய்து வருகிறோம்.
துண்டுகளின் தரத்தின் அடிப்படையில் ரூ.35 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு விற்பனை சிறப்பாக இருந்தது. இந்த ஆண்டும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இ்வ்வாறு அவர் கூறினார்.
பொங்கலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் துண்டு விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.