இந்துசமய அறநிலையத்துறை அதிகாரியின் காரை மறித்து பா.ஜ.க.வினர் மறியல்

பெரியகுளத்தில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரியின் காரை மறித்து பா.ஜ.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2022-12-07 17:08 GMT

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள கைலாசநாதர் மலைக்கோவிலில் நேற்று கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கோவில் அர்ச்சகர் ஒருவர் அவமதிப்பு செய்யப்பட்டதாக பெரியகுளம் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணனிடம் பா.ஜ.க. நிர்வாகியும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவருமான ராஜபாண்டி தலைமையில் பா.ஜ.க.வினர் புகார் தெரிவித்தனர். ஆனால் அதற்கு ஆணையர் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பா.ஜ.க.வினர் இன்று பெரியகுளம் கடைவீதியில் வந்த உதவி ஆணையர் கலைவாணனின் காரை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அர்ச்சகர் அவமதிப்பு செய்யப்பட்டது தொடர்பாக பதில் அளிக்காமல் சென்றது குறித்து கேட்டு கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் உதவி ஆணையர் கலைவாணனின் காரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் பெரியகுளத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பா.ஜ.க. நிர்வாகி ராஜபாண்டி கூறுகையில், கைலாசநாதர் கோவிலில் அர்ச்சகரின் வேட்டியை பிடித்து இழுத்து அவமதிப்பு செய்தனர். இந்த பிரச்சினை குறித்து உதவி ஆணையர் கலைவாணனிடம் கேட்டதற்கு உரிய விளக்கம் அளிக்காமல் சென்றதால் கண்டனம் தெரிவித்து மறியலில் ஈடுபட்டோம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்