ரேஷன் கடையை வேறு இடத்துக்கு மாற்றப்படுவதை கண்டித்து மறியல்

ரேஷன் கடையை வேறு இடத்துக்கு மாற்றப்படுவதை கண்டித்து கேளூர் சந்தைமேட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-26 15:56 GMT

கண்ணமங்கலம்,

ரேஷன் கடையை வேறு இடத்துக்கு மாற்றப்படுவதை கண்டித்து கேளூர் சந்தைமேட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சாலை மறியல்

போளூர் அருகே உள்ள தேப்பனந்தல் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை மிகவும் பழுதடைந்ததால், தற்போது வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையை கேளூர் கிராமத்திற்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதை அறிந்த தேப்பனந்தல் கிராம பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வேலூர்- திருவண்ணாமலை ரோட்டில் கேளூர் சந்தைமேட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் சமரசம்

இது குறித்து தகவலறிந்ததும் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சந்தவாசல் சப்- இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், நாராயணன், போளூர் மண்டல துணை தாசில்தார் தட்சணாமூர்த்தி, போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு, கேளூர் வருவாய் ஆய்வாளர் வரதராஜீலு, கேளூர் கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி ஆகியோர் சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்தனர்.

அப்போது பழுதடைந்த ரேஷன் கடைக்கு பதில் சந்தைமேட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டித்தரவும், கழிவு நீர் கால்வாய், சாலையை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், அதுவரை தற்போது உள்ள வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கும் என தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து சேறும் சகதியுமாக இருக்கும் தெருக்கள், சேதமடைந்த ரேஷன் கடை ஆகியவற்றை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்