தொப்பூர் அருகேபொதுமக்கள், வணிகர்கள் சாலை மறியல்

Update: 2023-07-29 19:30 GMT

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள், வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

தொப்பூர் அருகே மானியதள்ளி ஊராட்சி ஜருகு கிராமத்தின் சந்திப்பு சாலையில் உள்ள 4 திசை கடைவீதிகள் மற்றும் குடியிருப்பு வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி, சாக்கடை கால்வாய்கள் அமைக்கும் பணி ஊராட்சி மன்ற நிர்வாகம் தரப்பில் மேற்கொண்டு வந்தனர். இதற்கு சில வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சம்பவத்தன்று ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி, ஜருகு கிராமத்தில் உள்ள சந்திப்பு சாலையை ஒட்டி சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மேற்கொண்ட போது, அங்கு வந்த சிலர் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கினர். ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி நேற்று ஜருகு கிராமத்தில் வணிகர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வணிகர்கள் கடைகளை அடைத்து மறியலில் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தை

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரங்கசாமி மற்றம் போலீசார் விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்