புகைப்பட கண்காட்சி 14-ந் தேதி வரை நீட்டிப்பு

ஊட்டியில் புகைப்பட கண்காட்சி 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-06-02 21:45 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி கடந்த மாதம் ரோஜா, மலர், காய்கறி, பழக்கண்காட்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தநிலையில் ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தமிழக அரசு சாா்பில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் புகைப்பட கண்காட்சி கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கியது. அங்கு 120 புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. கண்காட்சியில் நீலகிரியின் இயற்கை காட்சிகள், மலைமுகடுகள், அரியவகை பறவை இனங்கள், வனவிலங்குகள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளது. மேலும் 72 பழங்கால கேமராக்களும் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 31-ந் தேதியுடன் புகைப்பட கண்காட்சி முடிவடைய இருந்த நிலையில், சுற்றுலா பயணிகள் புகைப்பட கண்காட்சியை பார்க்க ஆர்வம் காட்டுவதால் வருகிற 14-ந் தேதி வரை புகைப்பட கண்காட்சி நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 15 ஆயிரம் பேர் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்