காமராஜர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை
ஆலங்குளத்தில் புதிதாக ஒதுக்கப்பட்ட இடத்தில் காமராஜர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்;
ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ்பாண்டியன், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை 4 வழிச்சாலை விரிவாக்கத்தின் காரணமாக அகற்றப்பட உள்ளதால், பெருந்தலைவர் காமராஜர் சிலையை பாதுகாத்து மாற்று இடத்தில் அமைப்பதற்காக நான் அதற்கான இடம் தேர்வு செய்ய ஆய்வு செய்தேன்.
அப்போது ஆலங்குளம் வட்டம் ஆலங்குளம் கிராமம் புல எண் 424-ல் ஒரு சென்ட் இடம் ஒதுக்கி தந்து காமராஜர் சிலையை அமைப்பதற்கு விரைவில் ஆவன செய்ய, நடந்து முடிந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கையின்போது நான் எழுப்பிய வினாவின் அடிப்படையில், அந்த இடம் காமராஜர் சிலை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன்.
மேலும் தற்போது உள்ள காமராஜர் சிலையை சேதம் அடையாமல் அகற்றி புதிய இடத்தில் காமராஜர் சிலையை அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.