புஞ்சைபுளியம்பட்டியில் கோவில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும்; மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பக்தர்கள் மனு
புஞ்சைபுளியம்பட்டியில் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலத்தை மீட்கக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பக்தர்கள் மனு கொடுத்தனர்.;
புஞ்சைபுளியம்பட்டியில் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலத்தை மீட்கக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பக்தர்கள் மனு கொடுத்தனர்.
ஆக்கிரமிப்பு
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சமூக நலத்துறை தனித்துணை கலெக்டர் குமரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
புஞ்சைபுளியம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறி இருந்ததாவது:-
புஞ்சைபுளியம்பட்டியில் தண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இந்து சமயஅறநிலையத்துறையின் கீழ் கோவில் செயல்பட்டு வருகிறது.
வருகிற மார்ச் மாதம் 9-ந் தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் தற்போது திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
மோசடி
ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த சங்கரின் மனைவி சுப்புலட்சுமி கொடுத்த மனுவில், "எனக்கு தாய் வகையில் வரவேண்டிய சொந்த வீட்டை அடமானம் வைத்து கடன் பெற முயன்றேன். அப்போது கோபியை சேர்ந்த 2 பேர் என்னிடம் கடன் வாங்கி கொடுப்பதாக தெரிவித்தனர். அவர்களை நம்பி எனது பத்திரத்தை கொடுத்து கையெழுத்து போட்டேன். ஆனால் அவர்கள் கடன் பத்திரமாக எழுதாமல் கிரைய பத்திரமாக எழுதி பதிவு செய்துவிட்டனர். மேலும், எனக்கு கடன் கொடுப்பதாக கூறிய ரூ.2 லட்சத்தையும் கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது வீட்டை மீட்டு கொடுக்க வேண்டும்", என்று கூறி இருந்தார்.
வீட்டை இடிக்க முயற்சி
கோபிசெட்டிபாளையம் அருகே மேவாணி நேதாஜி வீதியை சேர்ந்த ராமனின் மனைவி சிவகாமி (43) தனது உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்களுடன் வந்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், "நான் குடும்பத்துடன் வசிக்கும் இடம் அரசின் புறம்போக்கு நிலமாகும். ஆனால் ஒரு சிலர் கருப்பசாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் என்று கூறி சிலர் வீட்டை இடிக்க முயற்சி செய்கிறார்கள். நாங்கள் 35 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எனவே கோவில் நிலம் என்று கூறி எனது வீட்டை இடிக்க அனுமதிக்கூடாது", என்று கூறி இருந்தார்.