கடம்பூர் அருகே ஓடையின் குறுக்கே பாலம் கட்டி கொடுக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

கடம்பூர் அருகே ஓடையின் குறுக்கே பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.;

Update: 2022-11-08 21:46 GMT

கடம்பூர் அருகே ஓடையின் குறுக்கே பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

பாலம் கட்டவேண்டும்

ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் கடம்பூர் அருகே உள்ள ஏரியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:-

நாங்கள் பழங்குடி இனத்தை சார்ந்தவர்கள். ஏரியூர் முதல் புதுக்காட்டூர் செல்லும் வழியில் பெரிய ஓடை செல்கிறது. இந்த ஓடை வழியாகத்தான் வயதானவர்களும், பள்ளிக்கூட மாணவ -மாணவிகளும் தினந்தோறும் சென்று வருகின்றனர். மேலும் விவசாயிகள் இந்த வழியாகத்தான் விவசாய விளை பொருட்களை எடுத்து செல்கின்றனர். மழை காலங்களில் இதில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மாணவ -மாணவிகள், பெரியவர்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் ஓடையின் குறுக்கே உடனடியாக பாலம் கட்ட மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

ராஜகுலத்தோர்

அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவையின் ஈரோடு மாவட்ட செயலாளர் சரவணகுமார் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்திருந்த மனுவில், 'எங்களுடைய சமுதாய மக்கள் தமிழகம் முழுவதும் சுமார் 60 லட்சம் பேர் உள்ளார்கள். எங்களது சாதி பெயரை (வண்ணார்) தொழில் பெயரோடு இணைத்து களங்கம் விளைவிக்கும் வண்ணமாக அழைப்பது தவறு. தொழில் வேறு, சாதி வேறு.

எனவே தமிழக அரசின் அரசாணைப்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின் படியும், மத்திய அரசின் அரசாணைப்படி இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் படியும் இருக்கக்கூடிய ராஜகுல என்ற உட்பிரிவை ராஜகுலத்தோர் என்ற பெயரில் எங்களை அழைக்க அரசாங்க சான்றிதழ் வழங்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்