அரசியல் கட்சி கொடிகளுடன் மனு கொடுக்க வந்த வியாபாரியால் பரபரப்பு

சாலையை சீரமைக்கக்கோரி தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு அரசியல் கட்சி கொடிகளுடன் மனு கொடுக்க வந்த வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-03 20:45 GMT

தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்தவர் கேரளபுத்திரன். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று அவர் வந்தார். அப்போது அவர் தனது கையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகிய 4 கட்சிகளின் கொடிகளையும் கையில் தூக்கி வந்தார். 4 கட்சிகளின் கொடிகளுடன் வந்த அவரை மக்கள் வேடிக்கையுடன் பார்த்தனர். அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, தங்கள் ஊருக்கு செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மனு கொடுக்க வந்ததாக கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, "தேனியில் இருந்து எங்கள் ஊருக்கு செல்லும் சாலை சேதம் அடைந்துள்ளது. பல ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. சாலை அமைக்கும் வரை நான் தாடியை எடுக்க மாட்டேன் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். பின்னர் சாலையை சீரமைக்கக்கோரி ஊரிலும், கலெக்டர் அலுவலகத்திலும் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து மனு கொடுத்தேன். அந்த பணத்தை கலெக்டரிடம் கொடுக்க போலீசார் அனுமதிக்காததால் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தேன். இதனால், சாலையில் ஒட்டுப்போட்டனர். ஆனால், நிரந்தரமாக சீரமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க., மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. கட்சிக்கொடிகளும், எங்கள் தொகுதி எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அ.தி.மு.க. கொடியும் கொண்டு வந்தேன். தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்டு கட்சிக்கொடியும் கொண்டு வந்து அனைத்து கட்சியினரின் சார்பிலும், அனைத்து கட்சியினரும் எங்கள் ஊருக்கு சாலை அமைக்க குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு வந்தேன்" என்றார்.

பின்னர் அவர் கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு கொடுத்தார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்