ஆபத்தான கோவில் சுவற்றை அகற்றக்கோரி மனு
ஆபத்தான கோவில் சுவற்றை அகற்றக்கோரி மனு அளிக்கப்பட்டது.;
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அதிகாரி கலைவாணியிடம் அளித்தனர். இதில் உடையார்பாளையம் தாலுகா காசான்கோட்டை கிராம மக்கள் அளித்த மனுவில், காசான்கோட்டை கிராமத்தில் 3 தலைமுறைகள் கடந்து சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முன் பக்கம் கட்டிடத்தின் சுவர் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் கோவிலுக்கு செல்லவே பொதுமக்கள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே கிராம பொதுமக்கள் சார்பாக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராம பொதுமக்கள் நன்கொடை மூலமாக புதிய சுவர் வைத்து கட்டிடம் கட்ட அனுமதி கேட்டிருந்தோம். இதுவரை அனுமதி வழங்கவில்லை. ஆனால் தற்போது இடிந்து விடும் நிலையில் உள்ள சுவற்றின் மீது விரிசலோடு மேற்கூரை ஓடு போட வேலை நடைபெற்று வருகிறது. அவற்றை தடுத்து நிறுத்தி இடிந்து விழும் நிலையில் உள்ள சுவற்றை அப்புறப்படுத்தி கான்கிரீட் கட்டிடமாக கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.