பழைய குற்றாலம் அருவியில் இரவிலும் குளிக்க அனுமதி கோரி கலெக்டரிடம் மனு
பழைய குற்றாலம் அருவியில் இரவிலும் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.;
தென்காசி:
தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், மாவட்ட பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் பிரான்சிஸ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, தனிநபர் கடன், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மனுக்களை அளித்தனர். மொத்தம் 660 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆயிரப்பேரி பஞ்சாயத்து தலைவர் சுடலையாண்டி தலைமையில் பொதுமக்கள், பழைய குற்றாலம் வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் ஆகியோர் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குற்றாலத்தில் சாரல் மழை தொடங்கி, சுமார் 15 நாட்களாக அருவிகளில் தண்ணீர் விழுந்து வருகிறது. தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது முதல்-அமைச்சரின் உத்தரவின்படி அனைத்து தடைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது.
குற்றாலம் மெயின் அருவி, புலியருவி, சிற்றருவி மற்றும் ஐந்தருவி ஆகியவற்றில் 24 மணி நேரமும் மக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு குளித்து வருகிறார்கள். ஆனால் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் இங்குள்ள வியாபாரிகள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே இரவிலும் இங்கு குளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
மேலும் அருவியில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் இறக்கி விடப்படுகிறார்கள். அந்த இடத்தில் இருந்து அருவிக்கரை வரை ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது போலீசார் ஆட்டோக்களையும் அனுமதிக்க மறுக்கிறார்கள். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அருவியில் இரவிலும் குளிக்க அனுமதி அளிக்காத பட்சத்தில் வருகிற 15-ந்தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.