மாற்று இடம் வழங்கக்கோரி சப்-கலெக்டரிடம் கார்குடல் கிராம மக்கள் மனு
மாற்று இடம் வழங்கக்கோரி சப்-கலெக்டரிடம் கார்குடல் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராம மக்கள் விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் கார்குடல் கிராமத்தில் சுமாா் 60 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறோம். இங்குள்ள ஏரிக்கரை தெருவில் 73 குடும்பங்கள் உள்ளது. நாங்கள் 60 ஆண்டுகளாக உழைத்து சேமித்து வைத்த பணம் முழுவதையும் போட்டு வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறோம். இந்நிலையில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாகவும், 73 குடும்பத்தினரும் உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும் வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மூலம் எங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த பட்டா செல்லாது எனவும், இடத்தை காலி செய்ய வேண்டும் எனவும் எங்களுக்கு நோட்டிஸ் வந்துள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். நீர் நிலைக்கு எங்களால் எந்தவித இடையூறும் இல்லாமல் தான் வாழ்ந்து வருகிறோம். மேலும் ஏரியின் நீர்மட்டத்திற்கும் எந்த பாதிப்பும் இதுவரை வந்ததில்லை. இத்தனை ஆண்டுகளாக நாங்கள் மின்சார வரி, வீட்டுவரி, தண்ணீர் வரி என அனைத்தையும் சரியாக கட்டி வருகிறோம். எனவே நாங்கள் குடியிருக்கும் இடத்தை எங்களுக்கே திரும்ப தர வேண்டும். இல்லையெனில் நாங்கள் குடியிருக்க அரசு மாற்று இடம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட சப்-கலெக்டர் பழனி அவர்களின் கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார். இதனை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.