நுண் உர செயலாக்க மையத்தை இடமாற்றம் செய்யக்கோரி மனு

நுண் உர செயலாக்க மையத்தை இடமாற்றம் செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-09-14 18:52 GMT

குளித்தலை பெரியார் நகர் ஜெய் மஹால் அவென்யூ குடியிருப்பு வாசிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் குளித்தலை நகராட்சி ஆணையர் நந்தகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குளித்தலை பெரியார் நகர் ஜெய் மஹால் அவென்யுவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் நகராட்சிக்கு சொந்தமான பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் நுண் உர செயலாக்க மையம் அமைக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நுண் உரக்கிடங்கு பொது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதால் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த 29.06.2022 அன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் அதை இடமாற்றம் செய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் நகர்மன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஏறத்தாழ ஒரு ஆண்டு முடிவடைந்து விட்டது. ஆனால் இடமாற்றம் செய்யப்படாமல் தொடர்ந்து அதே இடத்தில் நுண் உர செயலாக்க மையம் செயல்பட்டு வருகிறது.

குடியிருப்புகளுக்கு நடுவே நுண் உரக்கிடங்கு செயல்படுவதால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டின் ஜன்னல் கதவுகளை கூட திறந்து வைக்க முடியாத அவல நிலை உள்ளது. மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை உள்ளது. குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு மூச்சு திணறலால் தொடர் நோய் தொற்றும் ஏற்படுகிறது. ஈ மற்றும் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாக காரணமாக இந்த மையம் உள்ளது. குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்படுவதால் அவர்களின் உடல்நலமும் கல்வியும் பாதிக்கப்படுகிறது. எனவே நகர்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கால தாமதம் செய்யாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்