செல்லப்பிராணி வளர்ப்பதற்கான உரிமம்: சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு
இந்த உரிமம் அது வழங்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டிற்கு செல்லுபடியாகும்.;
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்குப் பகுதிகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் இணையவழி மூலம் விண்ணப்பித்து தங்களின் செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை, கால்நடை மருத்துவப்பிரிவின் சார்பில் செல்லப்பிராணிகளுக்கு இணைய வழி மூலம் உரிமம் வழங்கும் திட்டம் கடந்த 08.06.2023 அன்று மேயர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
செல்லப்பிராணிகளை வளர்ப்போர் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் உள்ள Pet Animal License- என்ற பகுதியை தேர்வு செய்து தங்களது அலைபேசி எண்ணை பயன்படுத்தி பதிவு செய்த பின்னர், தங்களது பெயர், முகவரி, அடையாள அட்டை சான்று, செல்லப்பிராணிகளின் புகைப்படம் மற்றும் பிற விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்விவரங்கள் மண்டல கால்நடை உதவி மருத்துவர்களால் சரிபார்க்கப்பட்டு, செல்லப்பிராணிக்கான உரிமம் உறுதிப்படுத்தப்படும். இவ்விவரம் குறுஞ்செய்தி மூலம் செல்லப்பிராணியின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.
பிறகு, இதற்கான கட்டணம் ரூ.50/-ஐ ஆன்லைன் மூலம் செலுத்தி செல்லப்பிராணி வளர்ப்பதற்கான உரிமத்தை பெருநகர சென்னை மாநகராட்சியின் மேற்கண்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த உரிமம் அது வழங்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டிற்கு செல்லுபடியாகும். ஆண்டுதோறும் இந்த உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும்.மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களில் வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி உரிமம் பெற்ற செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதக் காலத்தில் இத்திட்டதின் மூலம் 376 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உரிய பரிசீலனை செய்யப்பட்டு, 121 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிகுட்பட்ட பகுதிகளில் உள்ள செல்லப்பிராணிகள் வளர்ப்போர் அதற்கான உரிமத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்பதால் இச்சேவையை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இந்த வாய்ப்பை அனைத்து செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களும் பயன்படுத்திக் கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவேற்றம் செய்து, ஆன்லைன் வாயிலாக ரூ.50/- செலுத்தி, தங்கள் செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.