இல்லம் தேடி கல்வி மையத்தின் வகுப்பறை செயல்பாடுகளை கண்காணிக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி - கல்வித்துறை உத்தரவு

இல்லம் தேடி கல்வி மையங்களை நேரடியாக சென்று கண்காணிக்க தனியார் நிறுவனத்துக்கு கல்வித்துறை அனுமதி வழங்கியிருக்கிறது.;

Update: 2023-02-23 23:33 GMT

சென்னை,

கொரோனா தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய தமிழ்நாடு அரசு இல்லம் தேடி கல்வித் திட்டத்தை கொண்டு வந்தது. அந்த வகையில் இதற்கான தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் இல்லம் தேடி கல்வி மையங்களை நேரடியாக சென்று கண்காணிக்க தனியார் நிறுவனத்துக்கு கல்வித்துறை அனுமதி வழங்கியிருக்கிறது.

இதுதொடர்பாக இல்லம் தேடி கல்வி மையத்தின் சிறப்பு அதிகாரி இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

"ஜெ-பால் தென் ஆசியா" என்ற நிறுவனம் கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஆய்வு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசின் முதன்மை திட்டமான இல்லம் தேடி கல்வி மூலம் கற்றல் இழப்பை சரிசெய்வது தொடர்பான பங்களிப்பை அடையாளம் கண்டு வருகிறது.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கரூர், திருச்சி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் கற்றல் நிலைகள் குறித்து தெரிந்து கொள்ளவும், ஆய்வு மேற்கொள்ளவும் மேற்சொன்ன நிறுவனம் அனுமதி கோரியது.

அந்தவகையில் இந்த நிறுவனம் 5 மாவட்டங்களில் 37 தொகுதிகளில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு முன்னறிவிப்பின்றி வருகை தந்து, அங்கு வகுப்பறைகளின் செயல்பாடுகளை கண்காணித்து, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுடன் உரையாட ஆராய்ச்சி நோக்கத்துக்காக அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்