சுதந்திர தினத்தன்று நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சுதந்திர தினத்தன்று நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-08-11 20:33 GMT


திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் "எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் சுதந்திரதினத்தன்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இந்த வருடம், பெரியார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்து உள்ளோம். இதற்கு உரிய அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு அளித்தோம். அவர்கள் மறுத்துவிட்டனர். வருகிற 15-ந்தேதி காலை 7.30 மணியில் இருந்து பகல் 12 மணி வரை நாட்டுப்புற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நாகார்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு குற்றவியல் வக்கீல் தங்க அரவிந்த் ஆஜராகி, சுதந்திரதினத்தன்று போலீசார் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். எனவே மனுதாரர் கிராமத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு பகல் 12 மணி வரை பாதுகாப்பு வழங்குவது சாத்தியம் இல்லை, என்றார்.

விசாரணை முடிவில், ஏற்கனவே பிறப்பித்த வழிகாட்டுதல்களின்படி சுதந்திர தினத்தன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை மனுதாரர் கிராமத்தில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்த போலீசார் அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்