மஞ்சுவிரட்டு காளை விடும் விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு காளை விடும் விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

Update: 2022-12-12 13:27 GMT


திருவண்ணாமலை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு காளை விடும் விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உபகரணங்கள், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் மனு அளித்தனர்.

இதில் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

மேலும் கடந்த வாரங்களில் பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன், உதவி கலெக்டர் மந்தாகினி உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மஞ்சுவிரட்டு

திருவண்ணாமலை மாவட்ட தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டு மஞ்சுவிரட்டு முன்னேற்றம் மற்றும் ரசிகர்கள் பாதுகாப்பு சங்க கவுரவத் தலைவர் செம்மியன் தலைமையிலான நிர்வாகிகள் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் திருநாளை முன்னிட்டு மார்கழி மாதம் முதல் நாள் மேல்சோழங்குப்பம், வீரளூர், பட்டியந்தல், கடலாடி, கீழ்பாலூர், காரப்பட்டு, மேல்பாலூர் ஆகிய கிராமங்களில் காளை வழிகாட்டுதலும், தை திருநாள் முதல் மஞ்சுவிரட்டு காளை விடும் திருவிழாவும் நடத்துவது வழக்கம்.

அதுபோல் வருகிற 2023-ம் ஆண்டிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களை மஞ்சுவிரட்டு காளை விடும் திருவிழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நல வாரியம்

தமிழக கேபிள் ஆபரேட்டர்கள் பொதுநலச்சங்க மாநில துணைத்தலைவர் அருணகிரி தலைமையிலான நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அனலாக் நிலுவைத்தொகை கோரும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதையும் உடனே நிறுத்த வேண்டும்.

கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கான நல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மது விற்பனை

இந்து மக்கள் கட்சி ஆரணி நகர தலைவர் யுவராஜ் தலைமையிலான நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆரணி தாலுகா பையூர் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகர் குளக்கரை அருகில பங்க் கடையிலும், அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.

அங்கு மது வாங்க வருவோர் அங்கேயே குடித்து விட்டு தகராறு செய்வதும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாசமாக பேசுவதும், பெண்களை கேலி செய்வதும் போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.

இதனால் குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் நிம்மதியாக வசிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கள்ளத்தனமாக நடைபெறும் மது விற்பனையை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்