மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் போட்டோ சூட் எடுக்க நிரந்தர தடை

திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள், போட்டோ சூட் எடுக்க நிரந்தரமாக தடை விதித்து மதுரை மண்டல தொல்லியல் துறை உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-01 05:45 GMT

மதுரை,

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, மன்னர் திருமலை நாயக்கரால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தோ-சாரணிக் பாணியில் கட்டப்பட்ட அரண்மனையானது, பிரமாண்ட தூண்களுக்கு பெயர்பெற்றது. இந்த அரண்மனையில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. இதன் தூண்களின் உயரம் 82 அடி மற்றும் அகலம் 19 அடியாகும்.

திருமலை நாயக்கர் அரண்மனை, கடந்த 1971-ம் ஆண்டு தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்த அரண்மனையை தமிழக தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் மனதை கவரும் வகையில் மன்னர் கால வரலாற்றை விளக்கும் ஒளி -ஒலி காட்சிகளும் நடத்தப்படுகின்றன.

இதற்கிடையே, திருமலை நாயக்கர் அரண்மனையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் படப்பிடிப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள், விளம்பரம் மற்றும் திருமணம் தொடர்பான போட்டோ சூட்கள் அனுமதியின்றி நடத்தப்படுவதாகப் புகார் எழுந்தது.

இந்த நிலையில், மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள், போட்டோ சூட் எடுக்க நிரந்தரமாக தடை விதித்து மதுரை மண்டல தொல்லியல் துறை உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். வரலாற்று புகழ்பெற்ற திருமலை நாயக்கர் அரண்மனையை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்