பெரியார் பஸ் நிலையத்துக்கு மீனாட்சி அம்மன் பெயர் வைக்க வேண்டும் - மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பா.ஜனதா கோரிக்கை
பெரியார் பஸ் நிலையத்துக்கு மீனாட்சி அம்மன் பெயர் வைக்க வேண்டும் என்று மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது
மதுரையில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
கூட்டத்தில் பிரதமர் மோடியை ஜி-20 மாநாட்டின் தலைவராக தேர்ந்தெடுத்த உலக தலைவருக்கு நன்றி தெரிவித்தும், எனது பூத் வலிமையான பூத் என்ற முழக்கத்துடன் ஒவ்வொரு பூத்திலும் 25 உறுப்பினர்களை சேர்த்து கமிட்டி அமைத்துக் கொடுத்த மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டன. தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையத்திற்கு திருவள்ளுவர் பெயரை சூட்ட வேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலை அமைத்துக் கொடுத்த வாஜ்பாய்க்கு மதுரை விரகனூர் ரிங் ரோட்டில் வெண்கல சிலை அமைக்க சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும், பிரதமர் நரேந்திர மோடியின் உன்னத திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் படத்தையும் கல்வெட்டையும் வைக்காத மாவட்ட மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும். ஏழை எளிய மக்களை சிரமப்படுத்துகின்ற மின் கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வை தி.மு.க. அரசு ரத்து செய்ய வேண்டும். பெரியார் பஸ் நிலையத்திற்கு மீனாட்சி அம்மன் பஸ் நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணை தலைவர்கள் குமார், செந்தில்குமார், பொதுச்செயலாளர்கள் துரை பாலமுருகன், வினோத்குமார், ஜோதி மணிவண்ணன், பொருளாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.