பெரியகுளம் நகர்மன்ற துணைத்தலைவர் தகுதி நீக்கம் உத்தரவுக்கு இடைக்கால தடை

பெரியகுளம் நகர்மன்ற துணைத்தலைவர் தகுதி நீக்கம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து தேனி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

Update: 2022-06-30 16:02 GMT

பெரியகுளம் நகராட்சி 26-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக வெற்றி பெற்றவர் ராஜாமுகமது. பின்னர், இவர் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், நகராட்சிக்கு சொந்தமான மீன் கடையை தனது பெயரில் ஏலம் எடுத்ததை, தேர்தலுக்கான வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்று அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து பெரியகுளம் நகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வருகிற 9-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் ராஜாமுகமது மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணை நடத்திய கோர்ட்டு, இதுதொடர்பாக தேனி மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. இதையடுத்து தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டில் ராஜாமுகமது மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை நடத்திய நீதிபதி சஞ்சய் பாபா மனுவின் மீது இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவில், ராஜாமுகமதுவை தகுதி நீக்கம் செய்த உத்தரவுக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந்தேதி வரை தடை விதித்தும், அதுவரை நகர்மன்ற கவுன்சிலராகவும், துணைத்தலைவராகவும் அவர் பதவி வகிக்க நகராட்சி நிர்வாகம் எந்த இடையூறும் செய்யக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்