பெரியகுளம், கூடலூர் பகுதிகளில் 55 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பெரியகுளம், கூடலூர் பகுதிகளில் 55 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-06-27 18:45 GMT

பிளாஸ்டிக் பொருட்கள்

பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாந்தல், மார்க்கெட் பகுதி, சுதந்திர வீதி, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனம், உணவகம், பேக்கரி, கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அசன்முகமது தலைமையிலான அதிகாரிகள் அங்குள்ள கடைகளில் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது 40-க்கும் மேற்பட்ட கடைகளில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்காரர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ரூ.10 ஆயிரம் அபராதம்

இதைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல், கூடலூர் நகராட்சி சுகாதார அலுவலர் விவேக், உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் ஆகியோர் மெயின்பஜார் வீதி, எல்.எப்.ரோடு, கிழக்கு பஜார் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 2 கடைகளில் தடை செய்யப்பட்ட 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்