இடைநிலை ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்
இடைநிலை ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
கோத்தகிரி
இடைநிலை ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோத்தகிரியில் உள்ள தனியார் அரங்கில் நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மயில் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயசீலன் வரவேற்றார். கூட்டத்தில்
ஆசிரியர்கள் பதவி உயர்விற்கு தகுதித் தேர்வு தேர்ச்சி தேவையில்லை, ஆசிரியர்களின் பணி மூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு அளிக்க வேண்டும் என அரசு கொள்கை முடிவு எடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். நீலகிரி மலை மாவட்டம் என்பதால் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல வாகன போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாவலர் வசதிக்கான தொகையை பள்ளி மேலாண்மைக் குழுவின் வங்கிக் கணக்கிலேயே மாதந்தோறும் தாமதம் இல்லாமல் செலுத்த வேண்டும்.
ஊதிய முரண்பாடு
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட்டு, அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கூடலூர் சிறுபான்மை மொழி ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கி, ஆசியர்களுக்கு அரசு ஆங்கிலப் பள்ளிகளில் பணி மாறுதல் வழங்கப்பட வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு எமிஸ் வலைத்தளத்தின் மூலம் அதிகப்படியாக புள்ளி விவரங்களை பதிவேற்றும் செய்யும் பணிகளைத் தவிர்த்து, கற்பித்தல் பணியை மட்டும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஏராளமான ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் நிர்வாகி சுனில் குமார் நன்றி கூறினார்.